Tuesday, January 14, 2014

நிலமகள்

கல்லூரி காலங்களில் கல்லூரி இதழுக்காக உழவின் பெருமையைப் பாடி எழுதியது.


கதிரவன் தன் கண்திறந்து கீழ்வானம் சிவக்க‌
செம்மை நிற பூமியும்தான் தகதகவென ஜொலிக்க‌
ஏற்றமிகு வயல் அதனில் பயிரினங்கள் தழைக்க    -   சீர்
ஏருடனே புகுந்தனன் அவ்வுழவனும் அங்குழைக்க‌

செம்மண்ணில் சீராக சிறுவாய்க்கால் தவழ‌
பச்சை பட்டாடையுடன் நிலமகளும் திகழ‌
பசுமை போர்த்தா இடத்து நாணிச் செழுமை குழைய   -  இப்
புவனத்திற்கே புசிவிப்பவளாம் புவிமகள் நீ வாழ்க‌

கார்மேகங்கள் திரண்டு மழை பொழிந்த்து அன்ன‌
கருமேனிதனிலிருந்து வியர்வை மழைப் பொழிய‌
சிப்பிபோல பூமியவள் நலம் போற்றிக் காத்தாள்   -   அதை
சிறு பச்சை முத்தாம் பசுந்தளிராய் அளித்தாள்

உச்சியிலே சூரியனும் திமிருடனே ஏற‌
கஞ்சிதனை பாங்காக தலையினிலே ஏற்றி
வஞ்சியவள் வயலுடைய வரப்பேறி வந்தாள் ‍   -     அவள்
கொஞ்சும் நாயகனாம் உழவனையும் அடைந்தாள்

நாயகனின் தோளினிலே களைப்பாற‌ச் சாய்ந்து
நங்கையவள் அவனிடம் ஒரு கேள்வியினை விடுத்தாள்
"பார்மேலே பவனிவரும் பகலவனைப் பாரும்         -   இங்கே
படுத்திருக்கும் பூமி அதனிற் சிறந்தோ என கூறும்?"

"கரிக்கும் கடல் நீரை தான் கொண்டதன் பின்பே
கதிரவனோ உப்பாக காசதையும் தந்தான்
என் மிதிகளையும் ஏர் கீரலையும் கொண்டதன் பின்பும் - கண்ணே
நிலமகளோ வளமையையே தந்தாள்!" என்றான்.

                                                                                                -ரா .குழலவன்
Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

You might also like my other blog. Click here to get there.| எனது இன்னொரு வலைப்பதிவைக் காண இங்கே ஃகிளிக் செய்யவும்

No comments:

Post a Comment